குமிழி
1.
………..
மும்முனை என்று அழைக்கப் படுகிற அந்த முடிவில் ஒரு பெரிய பாறைக் கல் இருக்கிறது . உலகம் முடிகிற இடமாக அது தோற்றவில்லை. உலகம் உனக்காக விரிந்தே இருகின்றது என்பதாக அது பசுமை மேவிய இளங்காற்றை உயிர்ச் சுவாசத்திடம் தூதுவிட்டு வருடிக்கொண்டிருக்கும். அதில் நான் குந்தியிருக்கிறபோது காலடியின் கீழ் பெரும் பள்ளமாக பதிந்திருக்கிற சரிவு ஓர் பச்சை ஏணைபோல குழிவாகி மறுமுனை மலையுச்சியில் முடிந்திருக்கும். அந்த ஏணைக்குள் ஓர் நீல ஏரி உறங்கிக் கொண்டிருக்கும். சுற்றிவர மலைகளதும் அது விரித்துப் போட்டிருக்கும் மலையடிவார மடிப்புகளினதும் பிடிக்குள் மரக்கூட்டங்களிடையே அழித்தழித்து நிறங்களால் வரையும் முகில்களைக் கண்டு இரசிக்கிற குழந்தையாய்ப் போவேன்.
எல்லா காலநிலைகளுக்குமான அந்த மலையின் கோலமும் வர்ணங்களும் என்னை அழுத்திய துயரையும் விரக்தியையும் மெல்ல மெல்ல கரைத்துக்கொண்டது. எனது தனிமைக்கு அது அர்த்தத்தை வழங்கிக்கொண்டே இருந்தது. பனித்திரளில் சிற்பங்கள் தெரியும். சூரியன் உதிக்கிற நாட்களில் கதிர்கள் படையெடுத்து வந்து பனிக்காலத்தை ஒரு சிற்பக்கூடம் போல ஆக்கிவிடும். இலையுதிர் காலத்து ஓவியர்கள் மரங்களை யெல்லாம் நிறங்கள் பூத்த ஓவியமாக மாற்றிவிடுவர். வெயில் காலம் பசுமையைப் பொழிந்துவிட்டிருக்கும். கழுத்தில் கட்டிய பெரும் மணிகள் எழுப்பும் ஓசையின் இலயத்தில் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும். இலைதளிர் காலத்தில் நிறம் பூசி அலையும் முகில் கூட்டங்களின் தூரிகையிலிருந்து நிறங்கள் சொட்டும். சூரியக் கதிர்களால் மாலைவேளையில் துண்டாடப்பட்டுக் கிடக்கும் மலைத்துண்டுகள் மஞ்சள் வெயிலை பரிசளிக்கும். இளங்குளிர் காற்று எனதுடலை நீவிக்கொண்டிருக்கும். அவற்றை இரசித்தபடி பாறையில் தனிமையில் குந்தியிருப்பேன். அந்தக் கிராமத்துக்கு ஒரு கறுப்பனாக, ஒரேயொரு தமிழனாக நான் அறிமுகமானேன். என்னை அந்த மக்களின் உணர்வுகள் அரவணைத்ததோ இல்லையோ என்ற கேள்வியை எனக்கு வேண்டியிருந்த தனிமை எழவிடாமலே வைத்திருந்தது. ஆனாலும் அந்தக் கிராமம் ஒரு நிறவெறியரைக்கூட எனக்கு அறிமுகமாக்கியிருக்கவில்லை
என்னை என்னிடமே மீட்டுத்தந்த அந்த சூழலை நான் அண்மை யில் தரிசிக்கச் சென்றபோது பழைய நினைவுகள் சூழ்ந்தன.
நான் வேலைசெய்த அந்த சுற்றுலா விடுதி கைவிடப்பட்ட நிலையில் காட்சியளித்தது. அதற்குள் ஏக வேண்டும்போல் இருந்தது. மூளைக்குள் குந்தியிருந்த ஒழுங்குவிதிகள் தடுத்தன. அதற்குள் ஒருவரது நடமாட்டமும் தெரியவில்லை. மும்முனை யில் முடிந்து போய்விடுகிற அந்த பாதையோரமாய் அந்த விடுதியின் கார்த் தரிப்பிடத்தில் நின்றேன். இந்த இடத்தில் பனிக்காலங்களில் விடுதியில் தங்கியிருப்பவர்களின் கார்கள் சிலவேளைகளில் ஓர் இரவிலேயே பனியால் முழுவதுமாக மூடப்பட்டு, அலை உறைந்த ஒரு பனிவனம் போல் காலையில் இருக்கும். அதை இரசித்தபடியே நான் அவதானமாக பனித் திரளை அகற்றத் தொடங்குவேன். இளமையான என் உடலுக்கு அந்த கடின வேலை ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.
இப்போ இலைதளிர் காலத்தின் ஒரு பகலில் அங்கு நிற்கிறேன். மீண்டும் மீண்டுமாய் அந்த கட்டடத்தை பார்த்துக் கொண்டு நின்றேன். அது ஒரு நினைவுத் துயரை என்னுள் இறக்கிக் கொண்டிருந்தது. அதற்கு எதிர்த்தாற்போல் அந்த வீடு இப்போதும் அப்படியே இருந்தது.
‘மம்மா’ என்று நான் ஆசையோடு அழைத்த அவள் கிழவியாகி விட்டிருந்தாள். கண்பார்வை வேறு மங்கியிருந்தது. தனிமையில் இருந்தாள். அவளது பூந்தோட்டமும் சோபை இழந்திருந்தது. 27 வருடங்களுக்குப் பிறகு அங்கு வந்து நிற்கிறேன். அதே வீடு. அசுமாத்தம் எதுவுமில்லை. அவள் இப்போதும் இருக்கிறாளா இல்லையா என்ற சிறு சந்தேகம் வேறு துருத்தியது. வீட்டு அழைப்பு மணியை மென்விரலால் அழுத்தியபோது அவள் மெல்லக் கதவைத் திறந்தாள். கலவரமடைந்தேன். உடலைக் கிளர்த்திய இன்ப அதிர்ச்சி புன்னகையாய்ப் பிரகாசிக்க வணக்கம் சொல்லிவிட்டு, “என்னைத் தெரிகிறதா?“ எனக் கேட்டேன். சற்று புதிரான பார்வையோடு “இல்லை” என்றாள். அந்த இடைவெளி சில கணங்கள்தான் தாக்குப்பிடித்தது. எனது பெயரைச் சொன்ன துமே முகத்திலிருந்து புன்னகையும் ஆச்சரியமும் வெடித்துப் பரவ, அவள் கணநேரத் தயக்கமின்றி வாரியணைத்துக் கொண்டாள். அவளும் காலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு தாயானாள் என்று நிச்சயம் சொல்வேன். எனது மணிக்கட்டில் பிடித்து இழுத்துச் சென்றாள்.
“அடுத்தமுறை வருமுன்னர் தொலைபேசிவிட்டு வா” என்றாள்.
“நான் உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியை கொடுப்பதற்காகவே சொல்லாமல் வந்தேன். இனி சொல்லிவிட்டுத்தான் வருவேன்” என்றேன்.
………….
2.
1983 யூலை கடைசிப் பகுதி. இலங்கை மீண்டும் ஓர் இனக் கலவரத்தில் சிக்கித் தவித்தது. இரத்மலானை விமான நிலையம் அகதிமுகாமாக உருமாறியிருந்தது. ஆயிரக்கணக்கான அகதிகள். நாம் 55 பேரும் ஓரிடத்தில் குழுவாகியிருந்தோம். படுக்கை, இருப்பு எல்லாம் அந்த இடத்துண்டை எமது பிரதேசமாக ஆக்கியிருந்தது. அனைவரும் மொரட்டுவ பல்கலைக் கழகத்திலிருந்து பத்திரமாக கொண்டுவரப் பட்டிருந்தோம். எம்மாலான உதவிப் பணிகளில் நாம் அநேகமாக ஓய்வற்றி ருந்தோம். ஒரு கொலைக் கண்டத்தை கடந்து வந்ததான நினைப்பு எல்லாக் களைப்பையும் வெற்றிகொண்டது.
யூலை 24ம் தேதியென நினைக்கிறேன். எனது இரண்டாம் வருட பரீட்சை அன்றுதான் முடிவுற்றிருந்தது. நாம் வீடு கிளம்பும் ஆர்வத்தையெல்லாம் வாரியள்ளி தீயில் கொட்டியபடி புகை மண்டலம் எழுந்தது, தொலைவில்! பயம், சந்தேகம், பதட்டம் எல்லாமுமாய் தோய்ந்த அந்த மாலைநேரத்தில் அநேகமாக எல்லா சிங்கள மாணவர்களும் வளாகத்தை விட்டுப் போய்விட்டிருந்தனர். நாம் தனித்துவிடப்பட்டதாய் உணர்ந்த அந்தப் பொழுதில் சில சக சிங்கள மாணவர்கள் வந்தனர். ரோகண விஜயவீராவை தலைவராகக் கொண்டியங்கிய ஜேவிபியினர். அவர்கள் எம்மை அரவணைத்தனர். வளாகத்துள் இருந்த தங்குமிட கட்டடத்துள் (Hostel) நாம் தங்கியிருந்தோம். பின்னால் இருந்த காடு உருத்திரண்டு கிடந்தது. அவர்கள் சாப்பாட்டுப் பார்சல்களுடன் வந்தனர். “எம்மாலியன்றவரை உங்களை பாதுகாப்போம்” என்றனர். தம்மால் முடியாதநிலை வந்தால் பின்வழியால் காட்டுக்குள் ஓடி விடும்படி சொல்லிவைத்தனர். அருகில் இருந்தாலும் அந்நியமான காடு அது. ஒரு நாள்கூட அதன் விளிம்பைத்தன்னும் தொட்டுப் பார்த்த அனுபவம் இல்லை. அது பாதுகாப்பின் சாத்தியத்தை மட்டுமல்ல பயத்தையும் கூடவே ஒளித்துவைத்திருந்தது. இரவு அரக்கிக்கொண்டிருந்தது. நாம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு யன்னலோரமாய் பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஒவ்வொரு அறையினுள்ளும் பலர் கூட்டாக நின்றோம். அன்றைய இரவு தூக்கம் என்ற சொல்லை தொலைத்திருந்தது. விடியும்வரை அந்த சக மாணவர்கள் கையில் பொல்லுகளுடன் காவல் காத்தனர்.
மறுநாள் அவர்கள் மீண்டும் பார்சலுடன் வந்தனர். “இனி உங்களை எம்மால் பாதுகாப்பது முடியாத காரியம்போல் தெரிகிறது. வீதிநிறைந்த சனம். கையில் கொலைக் கருவிகளுடன் நின்று கத்துகின்றனர். நாம் வளாக தலைவருடன் கதைத்திருக் கிறோம். பொலிசார் வருவர். அவர்கள் உங்களை இரத்மலானை விமாநிலையத்துக்கு அழைத்துச் செல்வர்” என்றனர். இப்படி அவர்கள் சொன்னபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிற்பதாக உணர்ந்தோம். பொலிஸ் ஜீப், வான் என ஐந்தாறு வாகனங்களினுள் நாம் நெரிசலாக அடைக்கப்பட்டோம். வளாக வாயிலினூடு நழுவிக்கொண்டிருந்தன பொலிஸ் வாகனங்கள். வீதி முழுவதும் பொல்லுகளும் கத்திகளும் காட்டுக் கத்தல் களோடு உயர்ந்து உயர்ந்து பதிந்துகொண்டிருந்தன. அதை பொலிஸ் வாகனங்கள் நிச்சயமற்ற தன்மையுடன் தாண்டிக் கொண்டிருந்தன.
இப்போ நாம் இரத்மலானை விமான நிலையத்தில் நிற்கிறோம். வெறுமை எமைத் தொற்றியது. நினைவு வளாக வகுப்பறையுள் ஓடியது. கட்டடக்கலை கற்கைநெறியின் கடைசிவருட மாணவன் குரு. அவன் பாலச்சந்தரின் படத்தில் கொசுறுத் தத்துவங்களோடு அலைபவனைப் போன்ற தோற்றம் கொண்டவன். நான்கு பக்க சுவர்களிலும் அவனது மாடிக் கட்டடத்தின் படைப்பாக்க விளக்க வரைபடங்கள் (designs) சுவரில் பொருத்தப்பட்டிருந்தன. அவனது பரீட்சைக்கான முறை அது. நிமால் என்ற விரிவுரையாளர் வரிக் கோடுகளாலான அந்த படைப்பினுள்ளே புகுந்து கேள்விகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சரியாகப் பதிலளிக்க வேண்டும். ஒரு கட்டடக்கலைஞனாக உருவாகும் ‘தவம்’ கலையாமல் இருக்க போராடிக்கொண்டிருந்தான் குரு. இடைநடுவில் சற்று தடுமாற்றமடைந்தபோது, “ஏன் நீயெல்லாம் ஒரு ஆக்கிரெக்ரா வர யோசித்தாய்? பேசாமல் போய் குண்டு வைக்கிறதைப் பற்றி யோசி” என்றார் நிமால். சுற்றியிருந்த சிங்கள மாணவர்கள் வெடித்துச் சிரித்தனர். நாம் மவுனமாயிருந்தோம். எமது வகுப்பில் செனிவரட்ன ஒரு கலகலப்பானவன். அதே நேரம் எப்பவுமே ஒரு சிங்கள (வெறி) அடையாளம் அவனது குத்தல் பேச்சில் இருக்கும். ஒருநாள் பேணியொன்றுக்குள் சில கற்களை போட்டு அட்டகாசமாக குலுக்கியபடி எம்மருகே வந்தான். நாம் தமிழில் கதைத்துக்கொண்டிருந்தோம். “என்னடா செய்கிறாய்” என்று -சிங்களத்தில்- கேட்டதற்கு, “நானும் உங்களோடு தமிழ் கதைக்கிறேன்” என்றான்.
எமைத் தைத்திருந்த நினைவுகளை இரைமீட்டியபடி இரத்ம லானையில் மூடுண்டு நகர்ந்தது காலம். சில வாரங்களின் பின் செஞ்சிலுவைச் சங்கம் படிப்படியாக கப்பல் மூலமாக அகதிகளை காங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டது. நாம் கடைசிக் கப்பலில் பயணித்தோம். வேல்முருகனையும் இன்னும் மூன்று சக மாணவர்களையும் தொலைத்துவிட்டு புறப்பட்டிருந்தோம்.
வேல்முருகன் எனது அயல் கிராமம். தந்தை சோமசுந்தரம் பாடசாலை அதிபர். வேல்முருகன் பொறியியல் பீட கடைசி வருடத்தின் பரீட்சையையும் முடித்திருந்தான். “கலவரம் அடங்கிவிட்டது, இப்போ கொழும்பிலை பிரச்சினை எதுவுமில்லையாம்” என்ற பேச்சொழுக்கில் நனைந்த ஓர் நாளில், எம்முடனேயே இரத்மலானையில் இருந்த வேல்முருகனும் இன்னும் மூவருமாக ஒரு வாடகைக் கார் (ரக்சி) பிடித்து வெள்ளவத்தைக்கு தமது உறவினர் நிலையறிய சென்றிருந்தனர். நாம் தடுத்தோம். நிச்சயமற்ற தன்மையில் போகவேண்டாம் என்றோம். அவர்கள் போனார்கள்.
டெகிவல தேவாலயத்துக்கு முன்னால் வைத்து அவர்கள் நால்வரின் உயிரும் பறிக்கப்பட்ட செய்தியை நான் சோமசுந்தரத் தாரிடம் எப்படிச் சொல்வது. “அவன் வருவான். இன்னமும் கொஞ்சப் பேர் வர இருக்கு” என்ற சொல், அவர் என்னை அடிக்கடி வீடுதேடி வந்த பொழுதுகளால் தேய்ந்து நாராகிப் போகத் தொடங்கியிருந்தது. பின்னர் அவர் வருவதில்லை. இப்போ அவரை வீதியில் கண்டால் நான் சைக்கிளை திருப்பி தப்பியோடும் படலம் ஆரம்பமாகியது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக ஆகியிருந்தார். புசத்தியபடி திரிந்தார். என்னைக் கண்டால் “என்ரை பிள்ளை எங்கையடா? நீயெல்லாம் உயிரோடைதானே வந்திட்டாய். எங்கையடா என்ரை பிள்ளை?” என கத்தத் தொடங்குவார். “ங்கள்” எல்லாம் “டா” என மாறியிருந்தது. அவரது நிலைமையை, தோற்றத்தை பார்க்க எனக்கு வலு இருப்பதில்லை. வேல்முருகன் வாட்டசாட்டமான உயரம். சிரித்தபடியே பதுமையாக நடந்துசெல்லும் ‘செல்லப்பிள்ளை’. சோமசுந்தரத்தார் ‘தவமிருந்து’ 16 வருடங்களின்பின் பிறந்தவன். அவர் இடிந்துவிழாமல் என்ன செய்வார். சைக்கிளில் செல்லும் போதெல்லாம் வீதியில் அவர் தென்படுகிறாரா என்ற கவனிப்பை நான் தொலைத்து விடுவதில்லை. அவரை முகங்கொடுக்க முடியாமல் இருந்தது.
இனி ஒருபோதும் மொரட்டுவ வளாகத்துக்கு திரும்பிப் போவதில்லை என்ற முடிவை நான் அடைகாத்தேன். கடைசிநாள் வளாகத்தில் எமது புத்தகக் கட்டுகளையும் வரைபடங்களையும் பெயர் எழுதி கட்டி வைத்த அந்த அறையும் எரிந்து போனதாக பின்னர் அறிந்தேன். உண்மையில் அதை நான் கட்டி வைக்க வில்லை. கட்டி வீசினேன். இனி இங்கு மீண்டும் வருவதில்லை என எனக்குள் இருந்தவன் சபதமெடுத்திருந்தான். பின்னரான காலங்களில் நான் சென்றடைந்த இயக்கத்தின் அரவணைப்பில் எனது அவன் வளர்ந்து போராளியாகி விட்டிருந்தான்.
நாவலில் இருந்து ஒரு பகுதி