குமிழி - பகுதி 1
28
——–
——–
அரசியல் பிரிவுத் தோழர்கள் சிலரும் ஈசன், பாண்டி ஆகியோரும் தலைமறைவான விடயத்தை அறிந்திராத நிலையில் எமது அரசடி சந்திப்பு மையத்துக்கு சென்ற நான் அங்கு எவரையும் காணாமல் போக, அருகிலுள்ள பஸ்நிலையத்திற்கு சென்றேன். அங்கு லியோ ஒரு பெரிய பயணப் பையுடன் கொடிகாமம் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தான். அவனது விழிகள் தாழ்ந்து உயர்ந்தன. சொற்களை உற்பத்தி செய்து கதைத்தான். தான் தொலைத்தொடர்பு அலுவலாக வன்னிக்கு செல்வதாக அந்த சொற்கள் எனது அப்பாவித்தனத்தின் மீதோ அல்லது அவன் மீதான என் நம்பிக்கையின்மீதோ கூடுகட்டி அமர்ந்தன. சந்தோசமாக வழியனுப்பி வைத்தேன். ஆனால் அவன் வெளிநாடு போய்விட்டான். காலம் அந்தக் கூட்டை பிய்த்தெறிந்து அந்த சொற்களை கொன்று போட்டிருந்தன. ஏற்பட்டிருந்த புதிய ஆபத்தை அவன் அறிந்திருந்தும், ஏன் எமக்குச் சொல்லாமல், தான் மட்டும் தப்பிப் போனான் என்ற ஏமாற்றம் எனது இதயத்தை சிலுவையில் அறைந்தது.
புதிய கொந்தளிப்பான நிலைமையை அறியாது நானும் யோகனும் வழமைபோல் கொக்குவில் போனோம். கழக இராணுவப் பிரிவினரின் கைக்கு மாறியிருந்த கொக்குவில் சந்திப்பு மையத்தில் அன்று வழமைக்கு மாறாக அதிகம் பேர் நின்றார்கள். நடமாட்டம் வித்தியாசமாக இருந்தது. நானும் யோகனும் மெல்ல மோட்டார் சைக்கிளை திருப்பியபடி புறப்பட ஆயத்தமானோம். எங்களை மறித்த இராணுவப் பொறுப்பாளன் “உங்கள் இருவரிலும் விசாரணை இருக்கு. சில அசம்பாவிதங்கள் நடந்திருக்கு. அதுசம்பந்தமாக விசாரணைக்கு வரவேண்டியிருக்கும்” என இயல்பாகக் கதைத்தான். கையில் பிஸ்ரல் வைத்திருந்தான். அருகிலிருந்த வெள்ளை நிற வேனில் ஒரு கையை உயர்த்தி வைத்து ஊன்றியபடி சாய்ந்து யோகன் நின்றான். அவனின் கைவிரல்கள் மெல்ல நடுக்கமுற்றதை நான் அவதானித்தேன்.
“ஒரு பிரச்சினையுமில்லை தோழர். நாட்டின் விடுதலைக்காக நாம் எல்லாத்தையும் விட்டிட்டு வந்தனாங்கள். எங்களளவில் நாங்கள் நேர்மையாகவே இயங்கிறம். இயக்கத்தைப் பொறுத்தள வில் பிரச்சினைகள் வந்தால் அதை விசாரித்து தீர்க்கத்தானே வேணும். அதை நாம் புரிஞ்சுகொள்ளிறம். எப்பவெண்டு சொல்லி யனுப்புங்க. நாங்க வாறம்” என்று நான் சோடித்தேன்.
அவர்களின் அவசரம் வேறு இடங்களில் இருந்தது. ‘துரோகிகளை’ தேடியது. ‘உங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்றவாறாக அது எம்மை போக வழிவிட்டது. அது இயக்கத்தைவிட்டு ஓடிய மத்தியகுழு தோழர்களையும் அவர்களோடு இணைந்த அரசியல் பிரிவுத் தோழர்களையும் துரோகிகளாக தீர்த்திருந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டிய நான் யோகனிடம் “கொக்குவிலை கடைசி முறையாக வடிவாகப் பார்” என்றேன். ஊருக்குப் பறந்தோம். எல்லா நம்பிக்கைளும் முழுவதுமாக பொய்த்துப் போயிருந்தன. யோகன் வெளிநாடு போனான். அவன் தயக்கத்துடன் விடைபெற்றபோது “போய் வா மச்சான். ஏன் ரண்டுபேரும் சாகவேணும். நீயாவது தப்பு” என சொல்லி அனுப்பி வைத்தேன். உயிருக்கு உத்தரவாதமற்ற வெளியில் அநாதையாக விடப்பட்ட நான் -தவிர்க்க முடியாமல்- நடப்பது நடக்கட்டும் என நினைத்தேன். மரணத்தை எதிர்கொள்ள தயாராகவிருந்தேன் என நீங்கள் அதை மொழிபெயர்த்துக் கொள்ளலாம். அதுவும்தான். அதேநேரம் நான் வாழ்ந்து பார்க்க வும் ஆசைப்பட்டேன்.
“கவனமா இருந்துகொள் மச்சான். வேறை எதைச் சொல்ல” என்று அவன் சொன்னபோது அவனது வழமையான புன்னகை அணைந்துவிட்டிருந்தது. கையசைத்து வழியனுப்பினேன்.
பின்தளமும் தளமும் இருவேறு உலகமாக இயங்கியதைக் கண்டேன். எனது நிலையை பகிர யாருமில்லை. என்னுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய எனது ஊர் நண்பர்களிடம் நட்பை விட, தோழமையை விட இயக்கப் பற்று மேலெழுந்து நின்றது. என்னை விட, அவர்கள் இயக்கத்தை நம்பியதுபோல் பட்டது. இருந்தாலும் வேறு வழியில்லை. மெல்ல மெல்ல பின்தள நிலைமையை சொல்லத் தொடங்கினேன். அதிர்ச்சி அவர்களை ஆட்கொண்டது. இடிந்துபோய் விட்டார்கள். கிருஸ்ணா வையும் இன்னும் சில தோழர்களையும் அம்மன் கோவில் மடத்தில் வைத்து சந்தித்து, இந்த இழவுச் செய்தியை அவிழ்த்துக் கொட்டினேன். துன்பம் தாங்க முடியாமல் “ஐயோ” என தலையிலடித்து அழுதான் கிருஸ்ணா. எதிர்பாராமல் நிகழும் தாயின் மரண வீட்டில் படும் துயராக, ஒரு குழந்தைபோல் புலம்பி அழுதான். இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து குடியை நிறுத்திய அவன் பின்னரான காலத்தில் நிறை போதையில் என்னை வந்து சந்திக்கத் தொடங்கியிருந்தான். பின் அவன் கனடா போய்விட்டான்.
எனது வீட்டில் பாதுகாப்புக் காரணத்துக்காக உறங்க முடியாது என அம்மாவிடம் சொல்லி வைத்தேன். யாரிடமிருந்து பாதுகாப்பு என நான் சொல்வதாயில்லை. அம்மாவை கலவரப்படுத்த நான் விரும்பவில்லை. இலங்கை இராணுவத்திடமிருந்துதான் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன் என அம்மா நினைத்தாள். நான் ஊரில் நின்ற ஆறு மாத காலப் பகுதியில் ஒருசில நாட்கள் மட்டுமே வீட்டில் உறங்கினேன். இந்த நாட்களில் அம்மா விடியும்வரை எனது தலைமாட்டில் குந்தியிருந்தா. மிகுதி நாட்களில் எனது நண்பர்களும் தோழர்களுமான மூவர் எனக்குத் துணையாக படுத்தனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இயக்கத்தால் இருக்கவில்லை. மாறாக என்னுடன் பிடிபட்டால்தான் அவர்க ளுக்கு ஆபத்து வரும் என்றபோதும் அவர்கள் என்னை தனியனாக அலையவிடாமல் துணையாக இருந்தனர். நாம் ஆரம்பத்தில் பக்கத்து ஊருக்குள் இருந்த சிறிய கோவில்களில் போய்ப் படுக்க ஆரம்பித்தோம். அது பாதுகாப்பானதாக தெரியவில்லை. பிறகு சுடலையைச் சுற்றியிருந்த வெவ்வேறு தோட்டத் துரவுகளில் அதன் நீர்த் தொட்டிகளில் படுத்துறங்கினோம். அதன் குளிர்மை இதமாக இருந்தது. புகையிலையின் பச்சை வாடை பழகிப் போனது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் மெதுவாக எழுந்து அருகிலுள்ள சுடலைக்குப் போய் அதன் பாழடைந்த மண்டபத்துள் ஒளித்துக்கொள்வோம். இரவு நேரங்களில் அந்த வீதியால் யாரும் வருவதில்லை. பேய் பிசாசு எமக்குப் பாதுகாப்புத் தந்தது.
யோகன் வெளிநாடு போனபின் நான் கொக்குவில் போவ தில்லை. இயக்க மோட்டார் சைக்கிள் என்னுடன் இருந்தது
—–
பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் அல்லாடிய மனதுடன் இருந்தேன். வெளவால்கள் அற்ற இரவில், தறிக்கப்பட்ட வேப்பமர விருட்சத்தின் பாதத்தில் உட்கார்ந்திருந்தேன். கஸ்ரோ எங்கிருந்தோ வந்தான். எதிர்பார்க்கவில்லை.
“நீ காணாமல் போய்விட்டதாய் நினைத்திருந்தேன்” என நான் சொல்லிக்கொண்டிருக்க, உயர்ந்த என் புருவத்தில் விழிகள் ஏணை கட்டி ஆடின. தூறலாய் வந்த மழையில் உடலில் சோர்ந்திருந்த நரம்புகளெல்லாம் நெளியத் தொடங்கியது. எனக்குள் ஏதோ சுவறியது.
“எனக்கு அழிவில்லை” என கண்சிமிட்டிச் சொன்னான். பேசியபடி அவனது இருப்பிடத்துக்குச் சென்றேன். சோலையால் மூடி இருந்தது. நிழல் வீடு. யன்னல்கள் திறந்திருந்தன. அதனூடு பார்வை வெளி விரிந்து இந்த உலகை திறந்து காட்டிக் கொண்டிருந்தது. புதிய காற்று உள்ளே வீசியபடி இருந்தது. அது நரம்புகளில் படர்ந்து மூளைவரை நீண்டது. ஆயிரம் பூக்களின் மலர்வை அந்த . யன்னலோரச் சட்டகத்துள் ஓவியமாய் வரைந்து எனது சிந்தனையில் மெல்லக் கொழுவினான் கஸ்ரோ. வண்ணத்துப் பூச்சிகளின் சிறகசைப்பை அதன் படபடப்பை அதில் உணர்ந்தேன்.
“வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ, இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவது என்ன நியாயம்” என்றான்.
“களைத்துவிட்டேன். நம்பிக்கையை தொலைத்துவிட்டேன். நான் எனது உயிர் குறித்தே இப்போ கவலைப்படுகிறேன். நான் வாழவேண்டும். எனக்கு இருத்தல் மீது ஆசை வந்திருக்கிறது. மரணத்தை வெறுக்கிறேன்” என்றேன்.
“நானும்தான்” என்றான்.
“ஆடை களைவது போல் எல்லாவற்றையும் களைந்துவிட்டு ஒரு வெற்று மனிதனாக வாழ இலகுவில் உன்னால் முடியாது. எனக்கு உன்னை நன்றாகவே தெரியும். நொருங்கிப் போவாய்” என்றான்.
29
இக் காலகட்டத்தில் அன்பு பின்தளத்திலிருந்து திரும்பியி ருந்தான் அவனும் அச்சம், நம்பிக்கையீனம் என கதைகளோடு வந்தான். நானும் அவனும் பெரும்பாலான பொழுதுகளை எமது ஊர் வாசிகசாலையில் கழித்தோம். மற்றவர்களுடன் அதிகம் பேசுவதில்லை. அவர்கள் எமது மவுனத்தை வேறு மாதிரி புரிந்து கொண்டிருந்தார்கள். அது எதையும் பேசாமல் தவிர்ப்பதற்கு எமக்கு வசதியாக இருந்தது.
—-
எந்தத் திட்டமுமின்றி வாழ்வு நகர்ந்தது. பின்தளத்திலிருந்து எமது தொலைத் தொடர்பு முகாம் தோழன் பவான் வந்திருந்தான். அங்கு மாட்டுப்பட்டிருந்த தோழர்களை அவனில் கண்டேன். “இருக்கிறாங்கள்” என்றான். தான் ஓர் அலுவலாக இங்கு அனுப்பப் பட்டதாகவும் திரும்பிப் போக வேண்டும் எனவும் கூறினான்.
“திரும்பவுமா” எனக் கேட்டேன்.
“நான் திரும்பாவிட்டால் அங்கு மற்றாக்களுக்கு பிரச்சினை யடா. வாறது வரட்டும். செத்தால் சேர்ந்து சாவோம்” என்றான். அவன் மற்றாக்கள் என்று குறிப்பிட்டது அங்கு எஞ்சியிருந்த பெண் தோழர்கள் உட்பட்ட எமது தொலைத் தொடர்பு முகாம் சக தோழர்களைத்தான். எனது நிலைப்பாடுகளையும், நிலைமையையும் அவனுக்கு வெளிப்படையாகச் சொன்னேன்.
“நாங்கள் எட்டுப் பேர் தப்பி ஓடுவதற்கு திட்டமிட்டிருக்கிறம். அதுக்கு உன்ரை உதவி தேவை” என்றான். அவனுக்கு நித்திரைக் குளிசையும் கொஞ்சம் பணமும் தேவைப்பட்டது. கடையில் ஒரு தேநீர் குடிக்கக்கூட வழியில்லாத பரதேசியாய் திரிந்த நான் தீப்பொறிக் குழுவினரின் உதவியை நாடினேன். அவர்கள் குழுவுக் குள் முடிவெடுத்துவிட்டு, அறுநூறு ரூபா பணம் தந்தார்கள்.
நித்திரைக் குளிசையைப் பெறுவது என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. எமது ஊரவர்கள் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிற போதும் அவர்களிடம் எப்படி கேட்பது. எனவே தயக்கத்துடன் இதராவின் அம்மாவிடம் சென்றேன். முன்பு அந்தத் தாய்க்கு சொன்னதை தலைகீழாக இன்று மாற்றிச் சொல்ல வேண்டி ஏற்படுவதில் எழும் குற்றவுணர்ச்சியுடன் சென்றேன். “என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கம்மா” என்று நான் சொன்னபோது, என்னை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி, முழங்கையை தொடையில் ஊன்றியபடி தேம்பி அழ ஆரம்பித்தேன். எனது அம்மாவிடம் சொல்ல முடியாமல் எனக்குள் தேங்கி தழும்பி நின்ற வார்த்தைகள் கண்ணீராய் மேவி வந்தன. அருகே வந்த அந்தத் தாய் எனது தலையைத் தடவியபடி மவுனமாக இருந்தாள்.
சொன்னேன். எல்லாவற்றையும் தலைகீழாக்கிச் சொன்னேன். இப்போ அந்தத் தாயை நிமிர்ந்து பார்க்கும் துணிவு என்னிடம் இருக்கவில்லை. ஆனாலும் பார்த்தேன். அவள் தனது மகளை தொலைத்துவிட்டதாக நினைத்து இதுவரை காலமும் சகவாசம் செய்த அதே இடத்துக்கு தனது உணர்ச்சிகளை மீண்டும் அழைத்துச் செல்ல போராடிக் கொண்டிருந்தாள். நான் வந்து சந்தித்திருக்கக் கூடாது என நினைத்தேன். வெளியே போய்வந்த அவ இரண்டு நித்திரைக் குளிசை டப்பிகளுடன் வந்தா. இன்று அவ கதவுவரை வந்து வழியனுப்பவில்லை. இடிந்துபோய் கதிரையில் குந்தியிருந்தா.
மறுநாள் பவானை மீண்டும் சந்தித்து பணத்தையும் குளிசைகளையும் ஒப்படைத்தேன். “கவனம்” என்று சொல்லி வழியனுப்பி வைத்தேன்.
“நாங்கள் தப்பும்வரை வெளிநாடு கிளிநாடு எண்டு ஓடி யிடாதை” என்றுவிட்டுப் போனான்.
—–
அன்புவுக்கு பம்பாய் (மும்பை) போய் தங்கியிருக்கிற திட்டம் இருந்தது. எனக்கு எதுவுமே இருக்கவில்லை. பின்தளம் சென்ற பவானிடமிருந்து செய்திகள் எதுவும் கிடைக்கவுமில்லை. ஆனாலும் என்னை தனியனாக விட்டுச் செல்ல முடியாத தயக்கத் தில் அன்பு இருந்தான். பம்பாயிலிருந்து அவனது சகோதரன் அழைத்த போதெல்லாம் சாட்டுகள் சொல்லி தவிர்த்துக் கொண்டிருந்தான். எமது பெரும்பாலான பொழுதுகளும் ஊர் வாசிகசலையில் கழிந்தது. நான்கு பக்க ஒழுங்கைகளின் சந்திப்பு மையத்தில் இந்த வாசிகசாலை இருந்தது. அதன் முன்னால் உள்ள ஆலமரத்தின் அடியில், அதன் கிளம்பிய வேர்களில் குந்தியிருந்தால் நான்கு ஒழுங்கைகளும் பார்வைப் புலத்துள் இருக்கும்.
அன்று ஜீப் ஒன்று புழுதி கிளப்பியபடி வருவதை சரியாகவே அடையாளம் கண்ட நாம் இருவரும் ஒரு தற்காப்பாக அல்லது தவிர்த்தலாக பக்கத்து புகையிலைத் தோட்டத்துக்குள் புகுந்து மறைந்தோம். அந்த ஆலமரத்தையும் புகையிலை தோட்ட த்தையும் ஒரு சிறு வீதிதான் பிரித்து வைத்திருந்தது. சிறிது நேரத்தின்பின் அவர்கள் திரும்பிப் போயிருப்பார்கள் என்ற எண்ணத்தில் புகையிலைக் கன்றுகளினூடு ஊடுருவிப் போன நாம் அருகிலிருந்த கோவில் சகடையில் போய் ஏறியிருந்தோம். அன்ரனி சைக்கிளில் வந்தான். அதிர்ச்சியாகவிருந்தது. தன்னை அவர்கள் இடம் காட்டுவதற்காக ஏற்றிவந்ததாகச் சொன்னான். “அச்சுவேலியிலிருந்து வந்திருக்கிறாங்கள். கையில் ஆயுதங்க ளோடை இருக்கிறாங்கள். வாசிகசாலையடியில் உங்கடை ஊர் ஆள் ஒராள் நீங்கள் சிலவேளை இங்கை இருக்கலாம் என அவங்களட்டை இந்த சைக்கிளை குடுத்தார். நான் பார்த்திட்டு வாறன் எண்டு சொல்லி சைக்கிளை மெல்லவா வேண்டி வந்திட்டன். வந்திருந்தாங்கள் எண்டால் துலைஞ்சிருப்பியள். உங்களை இங்கை காணயில்லை எண்டு போய்ச் சொல்லுறன். ஓடித் தப்புங்க” என்று இடைவெளியின்றி பேசி முடித்தான்.
-……
இப்போ நாம் இருவரும் பரபரப்பாகி விட்டிருந்தோம். இனியும் இங்கு இருத்தல் சாத்தியமில்லை என்றானது. தயக்கத் துடன் சென்று அம்மாவிடம் உண்மை எல்லாவற்றையும் சொன்ன போது நான் உடைந்து போயிருந்தேன். அம்மா என்னை விடவும் பயந்து போயிருந்தாள். அவளுக்கு அதிர்ச்சி வேறு. “வெளிநாடு போகப் போறன் அம்மா. எப்பிடி போறது எண்டு தெரியயில்லை” என்றேன். அம்மா “நீ போயிடு” என்றாள். கதறி அழுதாள். ஒருவாறு பணத்தை திரட்டிக்கொண்டு கொழும்புக்குப் போய் மறைவாக இருந்தோம். அன்புவின் தாய் உதவினாள். எனது அக்காவும் உதவினாள். அக்காவின் தாலியும், அன்புவின் அம்மாவினது தோடு காப்புகளும் அவர்களது உடலிலிருந்து மறைந்தன.
உரப்பையுள் எமது உடைமைகளைக் கொண்ட சிறு பைகளை திணித்தோம். எமது ஆயுதங்களுடனும் இயக்க மோட்டார் சைக்கி ளுடனும் பணத்துடனும் புகைவண்டியைப் பிடிக்க கொடிகாமம் போனோம். அங்கு இன்னொரு இடதுசாரித் தோழரிடம் எல்லா வற்றையும் ஒப்படைத்துவிட்டு பயணமானோம். முதலில் பம்பாய் (மும்பை) க்கு போகத் தீர்மானித்தோம். அன்புவின் சகோதரன் நீண்ட விடுமுறையில் அங்கு தங்கியிருந்ததால் முதலில் அங்கு போய்விடுவது என முடிவெடுத்தோம்.
—–
இலங்கை மண்ணைவிட்டு பிரியும் நாள் வந்தது. பிரிந்தோம். குண்டிமண்ணைத் தட்டுவதுபோல் தட்டிவிட்டு போவதாக நான் நினைக்கவில்லை. தப்பிப் போதலே உடனடி இலக்காக இருந்தது. இந்த வாழ்வு எனக்கு இலவசமாகக் கிடைத்தது என்ற நினைப்பு எனது மனதின் அடி ஆழத்தில் பதிந்துபோயிற்று.
மும்பையில் தங்கியிருந்தபோது நாம் வெளிநாடு செல்வ தற்கான ஏற்பாடுகளை அன்புவின் சகோதரர் செய்து முடித்தார். நீண்ட விடுமுறை முடிந்து மீண்டும் கப்பல் வேலைக்கு போய்விட்டார்
—–
ஒரு மாத காலம் போயிற்று. நாம் வெளிநாடு போகிற ஆயத்தங்களை முகவர் செய்து தருவதாயில்லை. இழுத்தடித்துக் கொண்டிருந்தான்
—-
இதேநேரம் வெளிநாட்டு முகவரை செல்வா நெருக்கினான். கொஞ்சம் இயக்க செல்வாக்கைக் காட்டி பயமுறுத்தவும் செய் தான். சுவாமிப் படத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த சீல்களில் எமக்கு தேவையாக இருந்த விசாவை எடுத்து குத்தி தனது பணியை இலகுவாக முடித்தான் முகவர். தேவனும் பம்பாய் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்தான். இயக்கத்தின் மோசமான போக்குடன் இயங்க மறுத்து நாம் வெளியேறிக் கொண்டிருந்தோம். தேவனோ அந்தப் போக்குடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தான். இரு துருவங்களாக இடைவெளி பிரிந்துகொண்டிருந்தது. நாம் சிறகுகளை சூட போய்க்கொண்டிருந்தோம்.
பறப்பு தொடங்கிற்று.
மனிதர் எறும்புகள் போலாகி பின் மறைந்து போயினர். ஊர்கள் மறைந்து போயின. நாடுகளின் எல்லைகள் அழிந்து போயின. காடுகளின் பசுமையிலும், கடலின் நீலமையிலும் பூமி அழகாகத் தெரிந்தது. அண்ணார்ந்து பார்த்த நிலைபோய், கவிஞர்கள் கற்பனையில் கவியெறியும் முகில்திரளுக்கு மேலாக பறந்து கொண்டிருந்தோம். புகைப்பாலைவனத்தில் குன்றுகளாய் திரட்சியுற்றிருந்தன, இளஞ் சாம்பல்நிற முகில் கூட்டங்கள்!. அவைகளின் பின்னாலும் தேடிப் பார்க்கிறேன். ஏந்திய கனவுகளைக் காணவில்லை. மாலியையும் காணவில்லை. காற்றின் இரகசிய மூச்சொலியில் கலைந்துவிடக்கூடிய மென்மை கொள் முகில்திரள்மேல் ஓர் இறகாய்க் கிடக்க ஏங்கினேன் !
*